அணைக்கட்டு அருகே புரோட்டா மாஸ்டர் அடித்துக் கொலை - மூவர் கைது!

 
murder

வேலூரில் பெண்ணுக்கு செல்போனில் தொல்லை கொடுத்த பரோட்டா மாஸ்டரை அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் மகன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (48). இவர் பலவன்சாத்துகுப்பத்தில் உள்ள உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி மக்கான் அருகே சாலையில் நடந்துசென்றபோது வெங்கடேசன் திடீரென மயங்கி விழுந்தார். தகவலின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் அங்கு வெங்கடேசனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிதது வந்தனர்.  இதனிடையே, பிரேத பரிசோதனையில், வெங்கடேசன் தாக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார், சந்தேகத்தின் பேரில் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அல்தாப் அகமது(30), அப்துல்ரசாக்(30) மற்றும் இலாகி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அல்தாப் அகமதுவின் தாய்க்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்ததால் அவரை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

arrest

மேலும், போலீஸ் விசாரணையில், வெங்கடேசன் தனது தாயாருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். அப்போது, அல்தாப் அகமதுவின் தந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடனிருந்த அவரது தாய்க்கு வெங்கடேசன் உதவிகளை செய்து வந்துள்ளார். பின்னர், அல்தாபின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது தாயின் செல்போன் நம்பருக்கு போன் செய்து வெங்கடேசன் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் தெரிவித்த தகவலின் பேரில் அல்தாப் அகமது, தனது நண்பர்கள் இலாஹி, அப்துல் ரசாக் ஆகியோருடன் சென்று உணவகத்தில் இருந்த வெங்கடேசனை தாக்கி உள்ளனர். இதில் அவரது கழுத்துப்பகுதியில் ரத்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர், அவரை ஆட்டோவில்  ஏற்றிச்சென்று சாலையில் இறக்கிவிட்டுள்ளனர். அங்கு, நடந்துசென்றபோது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, கொலையாளிகள் அல்தாப் அகமது உள்ளிட்ட 3 பேரையும் வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.