போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நூதன முறையில் 14 பவுன் நகை கொள்ளை!

 
nellai theft

நெல்லை பாளையங்கோட்டை அருகே காவலர் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் 14 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரியை சேர்ந்தவர் வேலம்மாள் ( 65). இவர் நெல்லை பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி அருகே உள்ள மர்பி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலம்மாள், அதே பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 2 நபர்கள் வேலம்மாளை வழிமறித்து,  தங்களை போலீசார் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். பின்னர், அவர்கள் திருட்டு அதிகம் நடைபெறுவதால் இவ்வளவு நகைகளை அணிந்துகொண்டு வெளியே நடமாட கூடாது என்று அறிவுரை கூறியது, நகைகளை கழற்றி பையில் வைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.

theft

 அவர்கள் கூறியதை நம்பி மூதாட்டி வேலம்மாள், தான் அணிந்திருந்த 14 பவுன் தங்க நகைகளை கழட்டி காகிதத்தில் மடக்கி வைக்க முயற்சித்தார். அப்போது, இளைஞர்களில் ஒருவர் அவருக்கு உதவுவது போல் நகைகளை வாங்கி காகிதத்தில் வைத்து மடித்து கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றபின் அவர்கள் மீது சந்தேகமடைந்த வேலம்மாள் பையிலிருந்த காகிதத்தை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, காகிதத்தில் நகைகளுக்கு பதிலாக கல் இருந்துள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வேலம்மாள், இளைஞர்கள் நகையை மடிப்பது போல நடித்து திருடிச் சென்றதை அறிந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது, மர்மநபர்கள் இருவருர் மூதாட்டி வேலம்மாளிடம் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.