காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை!

 
poison

மானாமதுரையில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அந்தமானை சேர்ந்தவர்கள் சோனைமுத்து - பாண்டீஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் பிரியதர்ஷினி(19). இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த நாகமலை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த மே 17ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரியதர்ஷினி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். 

sivagangai

இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சாப்பாடு சரியில்லை என கூறி நாகமலை சாப்பிடவில்லையாம். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மானாமதுரை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷினியின் தந்தை சோனைமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 6 மாதத்தில் பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.