திருப்பூரில் காவல் ஆய்வாளர், 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

 
corona virus

திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் காவல் நிலைய ஆய்வாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை தொடர்ந்து, அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மேலும் 2 காவலர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. 

tiruppur

இதனை அடுத்து, 2 காவலர்களும் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளனர். காவல் ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். ஆய்வாளர் உள்ளிட்ட 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அனுப்பர்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.