கோவையில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை... ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் தற்கொலை செய்ததாக புகார்!

 
suicide

கோவையில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட நிலையில், பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டைமேடு பெருமாள்கோவில் வீதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். இவரது மகள் பொன்தாரணி(17). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறிய அவர், அம்மணியம்மாள் பள்ளியில் பிளஸ் 2 சேர்ந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த பொன்தாராணி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

coimbatore

இதுகுறித்து தகவல் அறிந்த உக்கடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து பொன்தாரணியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவி தற்கொலை செய்ததற்கு அவர் முன்பு படித்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததே காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவி புகார் அளித்தும் தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அவர் பள்ளியில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ள உறவினர்கள், இதனால் மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பாக பொன்தாரணி எழுதிய கடிதத்தை கைப்பற்றி உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.