மினிவேன் மோதி பழனிக்கு யாத்திரை சென்ற பக்தர் பலி!

 
accident

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பாத யாத்திரை சென்றவர்கள் கூட்டத்திற்குள் மினிவேன் புகுந்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் மாவூத்தன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சங்கையா - பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன் சதீஷ்குமார் (25). தாய், மகன் இருவரும் இன்று காலை பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். இன்று காலை கன்னிவாடி அருகே உள்ள குயவநாயக்கன்பட்டி பகுதியில் பக்தர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

dindigul

அப்போது, மதுரையில் இருந்து பக்தர்கள் பொருட்களை ஏற்றி வந்த மினிவேன் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மதுரையை சேர்ந்த 2 பக்தர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த சதிஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டத்தில் மினிவேன் புகுந்ததில் இளைஞர் பலியான சம்பவம் பாத யாத்திரை செல்வோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.