டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி!

 
dengue

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்த ஈச்சன்விளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம்(50). இவரது மகன் பவித்திரன் (19). இவர் ஐடிஐ படித்து முடித்துவிட்டு அகஸ்தீஸ்வரம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ரனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறைய வில்லை. 

kumari

இதனால், நாகர்கோவிலில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பவித்ரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதில் பவித்ரனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பவித்ரன் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.