விருதுநகரில் பட்டாசு ஆலைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து - ஆட்சியர் எச்சரிக்கை

 
virudhunagar

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் கூடுதல் மாவட்ட நிருவாக நடுவரால் உரிமம் வழங்கப்பட்ட ஆலைகள் மற்றும் கூடுதல் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலரால் உரிமம் வழங்கப்பட்ட ஆலைகள் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பட்டாசு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  அரசின் விதிகளின் படி ஆலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  ஒரு தடவை அளவு மற்றும் ஆண்டளவிற்கு உட்பட்டு, அனுமதி வழங்கப்பட்ட பாட்டாசு மற்றும் இதர வெடிபொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ வேண்டும். உச்சநீதிமன்றம் 29.10.21ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு பேரியம் உப்பு கலந்து தாயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

crackers

வெண்கலம், பித்தளை, கன்மெட்டல் மற்றும் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட  உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயன பொருட்கள் உபயோகப்படுத்தப்படும் அனைத்து நேர்வுகளிலும் அரசு சான்றிதழ் பெற்ற போர்மேன் முன்னிலையிலேயே பணிகள் நடைபெற வேண்டும். 18 வயதிற்கும் குறைவான பணியாளர்கள் எவரையும் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தக்கூடாது. பாட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு பயன்படுத்தக்கூடாது. பட்டாசு உற்பத்தி பணிகளின்போது இரும்பினாலான இடுக்கிகள், ஆணிகள், வாளிகள் போன்ற தளவாடங்கள் எதுவும் உபயோகப்படுத்தக்கூடாது.

இடி மின்னல் ஏற்படும் நேரங்களில் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தொழிற்சாலை / கிட்டங்கிகளுக்கு அருகே பட்டாசுகளை சோதனை செய்யக்கூடாது. பீடி, சிகரெட், தீப்பெட்டி, செல்போன், ரேடியோ போன்றவற்றை தொழிற்சாலைக்குள் கொண்டுசெல்ல அனுமதிக்கக்கூடாது. அறைகளுக்கு மின்இணைப்பு வழங்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அறைகளுக்கும் கூடுதலாக அறைகள் இருக்கக்கூடாது.

fire works

மருந்து கலவைகள் கொண்ட கொள்கலன்கள், பேக்கிங் செய்யப்பட்ட பட்டாசு பெட்டிகள் ஆகியவற்றை தரையில் இழுத்து செல்லவோ அல்லது தள்ளிச்செல்லவோ கூடாது. வெடிபொருட்களை தாயார் செய்வதற்கான பணிகள் அவற்றிற்கென நிர்ணயிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அறைகளை தவிர்த்து பிற பகுதிகளில் செய்யக்கூடாது. மருந்துகள் வைக்கப்பட்டு உள்ள அறைகளிலேயே மருந்துகளை கலக்கக்கூடாது அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறி அணுகுண்டு போன்ற வெடிகளை தயாரித்தல் கூடாது.

அறைகளுக்கிடையே வெளிப்புறங்களில் பாட்டாசுகளை தயாரித்தல் / சேமித்து வைத்தல் கூடாது. தொழிற்சாலையின் உற்பத்தி அறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு  அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிய அமர்த்தக்கூடாது. தொழிற்சாலையினை குத்தகைக்கு விடக்கூடாது அல்லது குத்தகை பணியாளர்களை பணியில் அமர்த்துதல் கூடாது. சிறு கற்களை கொண்ட வெங்காய வெடி போன்றவை தயாரித்தல் கூடாது.

virudhunagar ttn

மாவட்ட நிர்வாகத்தால் பாட்டாசு உற்பத்தி ஆலைகளை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுக்களின் ஆய்வின்பொழுது ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தொடர்புடைய பட்டாசு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட உரிமம் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நிரந்தரமாக ரத்துசெய்யப்படும் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.