ஒரு ஊசி ரூ.16 கோடி... இன்னும் ஒரு வருஷம் தான் உயிரோடு இருப்பான்! பெற்றோர் கண்ணீர்

 
தம்பதி

கடலூர் அருகே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் ஊசி போடவேண்டும் என தவிக்கும் தம்பதிகள் குழந்தையை காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கடலூர் அருகே முதுகுதண்டு வட வளைவு பிரச்சினையால் 1 வயது ஆண் குழந்தை பரிதவித்து வருகிறது. 16 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துக்காக ஊசிக்கு நிதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி மனு அளித்தனர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கடலூர் அருகே ஆலப்பாக்கம் அடுத்த கம்பளிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி சிவசங்கரி ஆகிய 2 பேரும் தனது 1 வயது ஆண் குழந்தை கிரித்திக்ராஜ்வுடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சந்திப்பதற்காக சென்றனர். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் தேர்தல் நடத்தை குறித்து தெரிவித்து, அங்குள்ள பெட்டியில் மனுவை போடுமாறு அறிவுறுத்தினர். அப்போது, தம்பதி தன்னுடைய 1 வயது மகனுக்கு முதுகு தண்டுவடத்தில் வளைவு ஏற்பட்டதால் அவனால் உட்கார, நடக்க முடியவில்லை. எப்போதும் படுத்த, படுக்கையாக இருக்கிறான். 

இதை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது தான் தெரிய வந்தது. அவர்கள் சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் , இந்த நோயின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் தங்களிடம் இல்லை என்றும், இது குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளதாக கூறினர். மேலும் குழந்தையின் தகவல்களை சிகிச்சைக்காக பதிவு செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கு எங்களது மகனை பரிசோதித்த டாக்டர், ஏ.வி.எக்ஸ். எஸ்.-101 என்ற மருந்தை பரிந்துரைத்தார். இந்த மருந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. 

வெளிநாட்டில் இருந்து தான்  இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் இதை விலை அதிகம் என்றார். மருந்து 16 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆகவே இந்த மருந்து ஊசி, பெற நிதி வழங்க வேண்டும். மேலும் அரசிடம் நிதி உதவி மற்றும் இந்த மருந்திற்கான வரி விலக்கு சான்று வேண்டும் என்றனர்.  இதை கேட்ட அதிகாரிகள் மனுவை பெட்டியில் போடுங்கள். கலெக்டர் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறினர். அதன்பேரில் அவர்கள் மனுவை பெட்டியில்  போட்டு சென்றனர்.