காவேரிப்பட்டிணம் அருகே டிராக்டர் மீது ஆம்னிபேருந்து மோதி விபத்து: காயமடைந்தவர்களுக்கு ஆட்சியர் நேரில் ஆறுதல்!

 
krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே டிராக்டர் மீது ஆம்னிபேருந்து மோதிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் ஆறுதல் கூறினார்.

தருமபுரி மாவட்டம் சவூளுர் கிராமத்தை சேர்ந்த 12 பேர், கற்றாழை கயிறு திரிக்கும் தொழில் செய்வதற்காக டிராக்டரில் ஆந்திர மாநிலம் வி. கோட்டா பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே எர்ரஹள்ளி  பகுதியில் சேலம் - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில்,  தருமபுரி மாவட்டம் சவூளுரை சேர்ந்த முத்து (20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45) மற்றும் 3 மாத குழந்தை வர்ஷினி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

krish

மேலும், டிராக்டரில் பயணம் செய்த புஷ்பா, காசி, அருள், காவியா, முருகன், செல்லம்மாள் ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிபட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு உயர் சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

krish

அத்துடன் பலியானவர்களின் உடல்களை விரைந்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் வழங்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து விபத்து நடைபெற்ற பகுதியை ஆட்சியர் தீபக் ஜேக்கப், காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது டிஎஸ்பி தமிழரசி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன், வட்டாட்சியர் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.