கோவை அருகே வீடுபுகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொலை!

 
cbe

கோவை ஆலந்துறையில் வீடுபுகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞரை அடித்துக்கொன்று, உடலை சித்திரைச்சாவடி அணையில் வீசியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆலந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடி அணையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதாக, ஆலந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அணையில் மிதந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், கடந்த 10ஆம் தேதி இரவு ஆலந்துறை சித்திரைச்சாவடி பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மணி என்பவரது வீட்டிற்கு வந்த வடமாநில இளைஞர், அங்கு திருட முயன்றதாகவும், அப்போது மணியின் மகன் விஸ்வநாதன், மருமகன் சம்பத்குமார் ஆகியோர் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கி, கட்டி வைத்துள்ளனர்.

cbe

தொடர்ந்து, அவர்கள் ஆலந்துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு சென்ற போலீசார், பிடிபட்ட நபர் மதுபோதையில் இருந்ததால் காலையில் காவல் நிலையத்தில் வந்து ஒப்படைக்கும் படி கூறிவிட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மறுநாள் காலையில் அந்த இளைஞர் மாயமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சித்திரைச்சாவடி அணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர், அந்த இளைஞர் தான் என்பது தெரிய வந்தது. மேலும், விஸ்வநாதன், சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததும், அவர்கள் உடலை அணையில் வீசிச் சென்றதும் தெரிய வந்தது.

 இதனை அடுத்து, 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இளைஞரை அடித்துக் கொன்றதாக சித்திரைச்சாவடியை சேர்ந்த விஸ்வநாதன், காளியப்பன், சம்பத்குமார், துரைசாமி, கார்த்தி, கணேசன், ஜெகநாதன், பொன்னுசாமி, ஜோதிராஜ், சரவணகுமார் ஆகிய 10 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு புகுந்த திருட முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஆலந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.