தென்காசி அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி!

 
dead

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் அழகேசன் (25). கேரளாவில் கூலி வேலை செய்து வந்த இவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேர்ந்தமரம் அடுத்துள்ள சுந்தரேசபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, தலை தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அழகேசன் நேற்று வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக நாற்று கட்டுகளை தலையில் சுமந்தபடி வரப்பினில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத நிலைதடுமாறி கால்வாயின் அருகில் சென்ற மின்கம்பத்தை பிடித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

tenkasi ttn

தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அழகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்த அழகேசன் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வீராணம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் பட்டுமுத்து, சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.  

அப்போது உயிரிழந்த அழகேசன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வீராணம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.