பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்கள்... கோவையில் பரபரப்பு!

 
periyar

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு மர்மநர்கள் செருப்பு மாலை அணிவித்தும், சிலையின் மீது காவிப்பொடியை தூவி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்திறிவு படிப்பக வளாகத்தில் பெரியாரின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை மர்மநபர்கள் சிலர் பெரியாரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடியை தூவியும் அவமரியாதை செய்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த படிப்பக நிர்வாகிகள், இதுகுறித்து உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

periyar

இதனிடையே, பெரியார் சிலை அவமதிப்பு குறித்து அறிந்த திராவிடர் கழகத்தினர், 10-க்கும் மேற்பட்டோர் சிலை முன்பாக திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலையை அவமதிப்பு செய்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போத்தனூர், போலீசார் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில், திராவிடர் கழகத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இன்று ழுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.