திருச்சி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!

 
dead body

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புரத்தாக்குடி தேரடி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் தங்கராஜ்(73). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.  தங்கராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், தங்கராஜ் மனைவியை பிரிந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

trichy

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கராஜின் வீடு பூட்டி கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வீட்டின் கதவை உடைத்துச்சென்று உள்ளே பார்த்தபோது, தங்கராஜ் படுக்கையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை அடுத்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜ் அளவுக்கு அதிகமாக குடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.