கள்ளக்குறிச்சி அருகே காதல் ஜோடி மர்ம மரணம்... ஆணவ கொலையா? என போலீசார் விசாரணை!

 
dead body

கள்ளக்குறிச்சி அருகே இளம் காதல்ஜோடி  மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது வகுப்பில் படிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மாணவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் அறிந்த பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவி வீட்டில் இருந்து மாயமாகினார்.

kallakurichi ttn

பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியின் செல்போனை வைத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள சோமண்டார்குடி ஆற்றங்கரை பகுதியில் உள்ள மரத்தில் மாணவர் தூக்கிட்ட நிலையிலும், மாணவி ஆற்றில் சடலமாக மிதந்த படியும் போலீசார் உடல்களை மீட்டனர்.

இருவரது உடல்களும், வெவ்வேறு இடங்களில்  மீட்கப்பட்டுள்ளதால், அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ.எஸ்.பி., ஜவஹர்லால், டிஎஸ்பி ராஜலட்சுமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.