கன்னியாகுமரிக்கு ரயிலில் வந்த பயணி மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead body

சென்னையில் இருந்து குமரிக்கு ரயிலில் வந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயில், நேற்று அதிகாலை குமரி ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறங்கியதை அடுத்து,  ரயில்வே ஊழியர்கள் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெட்டியில் 32 வயது மதிக்கதக்க இளைஞர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

kumari

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், மயங்கி கிடந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குமரி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்தும், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அந்த வாலிபர் சென்னை எர்ணாவூரை சேர்ந்த ஹாசன் என்பது தெரியவந்தது. மேலும், அவரது மனைவி காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்த போலீசார், அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.