மூதாட்டியை கொலை செய்து 5 பவுன் நகைகள் கொள்ளை - மர்மநபர்கள் வெறிச்செயல்!

 
murder

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மூதாட்டியை கொன்று அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அம்மன்புரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி நாகூராள் (85). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு, அவரது பேரன் உணவு வாங்கி கொடுத்து பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மூதாட்டி நாகூராள் வழக்கம்போல் தூங்க சென்றுள்ளார். தொடர்ந்து, நேற்று காலை உணவு கொடுப்பதற்காக பேரன் சென்றபோது வாயில் ரத்த காயங்களுடன் நாகூராள் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

murder

மேலும், அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பேரன் இதுகுறித்து, குரும்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் குரும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், மூதாட்டி நாகூராளின் நகைகளை திருடும் முயற்சியின்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் மூதாட்டியை கொன்றுவிட்டு தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.