மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை... கோவையில் சோகம்!

 
dead body

கோவை துடியலூர் அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் பார்க் சிட்டி பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி(53). இவரது கணவர் திருமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவரது மகன் சசிகுமார்(34). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவியுடன் சரவணம்பட்டியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, தனலட்சுமி சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட மகள் சுகன்யா(31) உடன் தனியே வசித்து வருகிறார். மகளின் நிலையை எண்ணி தனலட்சுமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

coimbatore gh

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் வீட்டிற்கு வந்த குடுகுடுப்பைக்காரன் தோஷம் இருப்பதாக கூறி பரிகாரம் செய்யாவிட்டால் மகனுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் என சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் தனலட்சுமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், வாழ்வில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு மகள் சுகன்யாவுக்கு, விஷம் கொடுத்துவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  நேற்று காலை சசிகுமார், தாய் தனலெட்சுமிக்கு போன் செய்தபோது அவர் நீண்டநேரமாக எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சசிகுமார் அருகில் உள்ளவர்களிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்கும் படி தெரிவித்துள்ளார். அதன்படி, அக்கம் பக்கத்தினர் சென்றபோது தாய், மகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சசிகுமார், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.