மொடக்குறிச்சியில் ரூ.3.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ சரஸ்வதி!

 
saraswati

மொடக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு ரூ.3.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாஜக எம்எல்ஏ சரஸ்வதி வழங்கினார். 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.3.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

saras

அதன்படி, சமூகநலத்துறை சார்பில் 2 பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச தையல் இயந்திரம், மருத்துவத்துறை சார்பில் காப்பீடு அட்டை, மின்சாரத்துறை சார்பில் இலவச விவசாய மின் இணைப்பு மற்றும் புதிய பிரிவு அலுவலக கட்டிடம், வருவாய்துறை சார்பில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, சமுதாய முதலீட்டு கடன், வங்கி நேரடிக் கடன், தொழில் முனைவோர் கடன், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சக்கர நாற்காலி, உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, துணைத் தலைவர் சுப்ரமணியம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), உதவி ஆணையர் (கலால்), மின்சார துறை உதவி இயக்குனர் மற்றும் உதவி பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர் -  மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.