சூலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல்!

 
cbe protest

கோவை மாவட்டம் சூலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி எம்எல்ஏ கந்தசாமி தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம்  பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடையை அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கந்தசாமி தலைமையில்  200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை  பல்லடம் - செட்டிபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tasmac

அப்போது, கள்ளப்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற  தொடர் போராட்டங்கள் நடத்தியும் டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், எனவே டாஸ்மாக் மேலாளர் நேரடியாக வந்து கடையை அகற்றுவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என  தெரிவித்தனர். தகவல் அறிந்த சூலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது, டாஸ்மாக் கடை அகற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதனிடையே, சாலை மறியல் போராட்டம் காரணமாக பல்லடம் - செட்டிப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.