மழைநீரை அகற்றும் பணிக்காக சென்னைக்கு டிராக்டர்களை அனுப்பிவைத்த அமைச்சர்கள்!

 
ministers

சென்னையில் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிக்காக திருப்பூரில் இருந்து மழைநீரை வெளியேற்றும் கருவிகளுடன் 3 டிராக்டர்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் லேசாக வடிய தொடங்கிய மழைநீர் மீண்டும் குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தேங்கியுள்ள மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அவர்களுக்கு உதவிடும் வகையில் முதவல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மழைநீரை வெளியேற்றும் கருவிகளுடன் 3 டிராக்டர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து, டிராக்டர்களை அனுப்பி வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், சென்னையில் மழையினால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி முதல்வர் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது.

rain

இதற்கு உதவிடும் விதமாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைநீரை வெளியேற்றும் கருவிகளுடன் கூடிய 3 வாகனங்களை அனுப்பி வைத்துள்ளோம். இந்த வாகனங்கள் நாளை சென்னையில் பணிகளை துவங்கும். மேலும், தேவை ஏற்பட்டால் திருப்பூரில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், படியூர் ஊராட்சி தலைவர் ஜீவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.