"கோவையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 12 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை" - அமைச்சர் செந்தில் பாலாஜி!

 
senthil

கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 9 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க மாவட்டங்கள் தோறும் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் ஆய்வுக்கூட்டம், அனைத்துத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது.

இங்கு எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில், கோவையில் அரசு நிர்வாகத்தின் சார்பில் 7,368 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 4,691 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, கோவை மாவட்டத்தில் மொத்தம் 12,059 படுக்கைகள் தாயார் நிலையில் உள்ளது. அதில், மொத்தம் 4,397  ஆக்சிஜன் படுக்கைகள், மற்றும் தீவிர சிகிச்சை பரிவில் 853 படுக்கைகள் உள்ளது. தேவைப்பட்டால் படுக்கை எண்ணிக்கைகள் உடனடியாக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

cbe

கோவை மாவட்டத்தை பொருத்தவரை 27.90 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள நிலையில், 27.03 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 87 ஆயிரம் பேருக்கு இல்லங்களில் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான ஆலோசனை நடைபெற்றது. 81 சதவீதம் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்  நாளொன்றுக்கு 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் அதை 12ஆயிரம் ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 11 சோதனைச்சாவடிகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கவனிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், பொதுமக்களுக்கு உள்ளூர் தொலைக்காட்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதைபோல், மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும்  100 சிறப்பு அலுவலர்கள், 33 பேரூராட்சிகளுக்கும் 33 சிறப்பு அலுவலர்கள், 7 நகராட்சிகளுக்கும் 7 சிறப்பு அலுவலர்கள், 12 ஊராட்சிகளுக்கும் 12 சிறப்பு அலுவலர்கள் என 152 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாட்ஸ்அப் குழு மூலம், தகவலை பகிர்ந்து கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

cbe

கோவையில் தடுப்பு நடவடிக்கைகளில் 2,206 மருத்துவ பணியாளர்கள் தற்போது உள்ள நிலையில், அவர்களுக்கு 2 மாதம் கூடுதல் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. மேலும், 1,105 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 3,311 மருத்துவ பணியாளர்கள் தற்போது தயாராக உள்ளனர். மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அதற்கு முந்தைய தினம் அதிகமாக மளிகைக் கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் இயன்றவரை தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடைகளை பொருத்தவரை ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, அரசு வழிகாட்டுதலின்படி நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.

கோவையில் 70,950 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டியவர்கள். 1,671  பேர் தற்போது வரை செலுத்திக்கொண்டு உள்ளனர். ஒமிக்ரான் பரிசோதனை செய்ய அரசு சார்பில்  தற்போது 2 லேப் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு தடுப்பூசி தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர் ஆலோசனை செய்வதாக கூறி உள்ளனர். அவர்கள் ஆலோசித்து விட்டு கூறினால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கூறினார்.

முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச்சாவடிகளில் இருந்து வரும் சிசிடிவி  நேரலை காட்சிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.