ஈரோட்டில் 15 - 18 வயது உடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

 
vaccination

ஈரோடு மாவட்டத்தில் 15 முதல் 18 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. 15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நேற்று தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்திலும் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு  தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 23,77,315 மக்கள் தொகை உள்ளனர். இதில், 18 வயது மேற்பட்டவர்கள் 18,09,100 பேர் உள்ளனர். இதுவரை 15,88,357 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர். 2ஆம் தவணை தடுப்பூசியை 11 லட்சத்து 31 ஆயிரத்து 802 பேர் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில், 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளி 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் சோமசுந்தரம், நகர் நல அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.  

muthusamy

பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, நமது மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. நமது மாவட்டத்தில் முதல் தடுப்பூசியை 87.8 சதவீதம் பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 67.56 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். தடுப்பூசிகள் அதிக செலுத்திக் கொண்டவர்கள் மாவட்டத்தில் ஈரோடு மாவட்டமும் ஒன்று. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

இதேபோல், 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி  கொள்ளாதவர்களும் செலுத்திக் கொள்ள வேண்டும். 15 வயது முதல் 18 வயது வரை சிறுவர்களுக்கு இந்த முதற்கட்டமாக 92 பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக 452 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 60 வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. இன்னும் 5 நாட்களுக்குள் 15 முதல் 18 வயதுடைய அனைத்து சிறுவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 3,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.