கோவை விமான நிலையத்திற்கு கைத்துப்பாக்கியுடன் வந்த கேரள காங். பிரமுகர்... போலீசார் விசாரணை!

 
airport

கோவை விமான நிலையத்திற்கு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்த கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தாங்கல்(60). இவர் கேரள காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக  பொறுப்பு வகித்து வருகிறார். பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்த நிலையில், தங்கல் கோவையில் இருந்து பெங்களுருக்கு விமானம் மூலம் சென்று  அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக பட்டாம்பியில் இருந்து அவர் காரில் கோவை விமான நிலையத்துக்கு வந்தார்.

cbe airport

விமான நிலையத்தின் உள்ளே சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த சிஎஸ்ஐஎப் வீரர்கள் அவரது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது,  கைப்பையில் ஒரு 22 எம்.எம். கைத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைத்துப்பாக்கி துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தங்கலிடம் சிஎஸ்ஐஎப் வீரர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது,  துப்பாக்கியை சொந்த பாதுகாப்பிற்காக வைத்திருந்ததாகவும், உடமைகளோடு துப்பாக்கி இருந்தது குறித்து தெரியவில்லை என்றும் கூறினார்.

எனினும் துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சிஎஸ்ஐஎப் வீரர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை பீளமேடு காவல் நியைத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, தங்கலை, பீளமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.