கரூரில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு!

 
vehicle checkup

கரூர் மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை செயல்படவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்தார். 

அதன்படி, இன்று காலை 7 மணி முதல் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், வருவாய் துறையினர், சுகாதாரத் துறையினர் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 48 வார்டுகளில் 2 வார்டுகளுக்கு ஒரு அதிகாரி என்ற கணக்கில்  250 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

karur

மேலும், நகரின் முக்கிய பகுதிகளான ஜவகர் பஜார், கோவை ரோடு, உழவர் சந்தை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், திரையரங்குகள், பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

கரூர் உழவர் சந்தை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், முக கவசம் அணியாத 30-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தார். இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவரும் போலீசார், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு முக கவசம் அணியாததால் அபராதம் விதித்தனர்.