பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்ய பெருந்துறை சிப்காட்டில் தனி இடம் ஒதுக்க வலியுறுத்தல்!

 
plastic

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்புடன் கூடிய தனி இடம் ஒதுக்கி, பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக கிளஸ்டர் உருவாக்கி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சங்க கூட்டம் ஈடிசியா கூட்ட அரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கராஜ், துணை தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவை மண்டல நிர்வாகி சுருளிவேல், தொழிலதிபர் செந்தில்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

erode

இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதற்காக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்புடன் கூடிய தனி இடம் ஒதுக்கி, பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக கிளஸ்டர் உருவாக்கி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையோர பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் புதிய பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்கி, நாட்டின் சுற்றுச்சூழலை பெருமளவில் பாதுகாக்கப்படுவதால், மறுசுழற்சி செய்யக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி.,யில் இருந்து வரி விலக்கு அளிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மறுசுழற்சி தொழிலை செய்ய, தளர்வுகளுடன் கூடிய சான்றிதழை வழங்க வேண்டும். ஈரோடு மூலப்பட்டறை, கே.என்.கே. ரோடு, காவேரி ரோடு சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினர். இந்த கூட்டத்தில், துணை செயலாளர் கணேசன், பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.