டிராக்டரில் பாதுகாப்பின்றி ஆட்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை... தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை!

 
tractor

டிராக்டர் மற்றும் டிரைலரில் பாதுகாப்பின்றி ஆட்களை ஏற்றிச்சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் டிராக்டர் மற்றும் டிரைலர் வாகன உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களுக்கு முறையாக சாலை வரி, தகுதிச்சான்று, வாகன காப்பீடு, சிகப்பு நிற பிரதிபலிப்பான், சிகப்பு எச்சரிக்கை விளக்குகள் மற்றும் முறையான ஓட்டுநர் உரிமம் ஆகிய அனைத்து ஆவணங்களும் நடப்பில் இருந்தால் மட்டுமே பொது சாலையில் இயக்க வேண்டும்.

மேலும், டிராக்டர் உடன் முறையாக பதிவு செய்யப்பட்ட டிரைலரை மட்டுமே இணைக்க வேண்டும் எனவும், அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத டிரைலரை டிராக்டர் உடன் இணைத்து பொதுசாலையில் இயக்குவது தெரியவந்தாலும், டிராக்டர் மற்றும் டிரைலரில் பாதுகாப்பின்றி ஏற்றிச்சென்றாலும் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட டிராக்டர் மற்றும் டிரைலர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.

dharmapuri ttn

மேலும், டிராக்டர் மற்றும் டிரைலர் வாகனங்களை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வரி சலுகை மேற்குறிப்பு பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வரி சலுகை மேற்குறிப்பு பெற்றுள்ள வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினாலும் உரிய நடவடிக்கை எடுக்கடும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு தொழிலாளர்கள் டிராக்டரில் சென்றபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே ஆம்னி பேருந்து மோதி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், டிராக்டர் மற்றும் டிரைலர் உரிமையாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.