ஈரோடு ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது!

 
indu makkal katchi

பஞ்சாப் அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றபோது, அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் அரசை ராஜினாமா செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

junction erode

அதன்படி, நேற்று காலை இந்து மக்கள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், ஈரோடு காளைமாடு சிலை அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ரயில் நிலையத்தை நோக்கி கோஷமிட்டவாறு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார், ரெயில் நிலையம் முன் பகுதியில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உள்ளே நுழைய முயன்ற இந்து மக்கள் கட்சியினரை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால், இந்து மக்கள் கட்சியினர் சென்னிமலை ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பஞ்சாப் முதலமைச்சர் புகைப்படம், ராகுல் காந்தி புகைப்படத்தை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சூரம்பட்டி போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.