அனுமன் ஜெயந்தி- ஈரோடு வ.உ.சி பூங்கா ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

 
hanuman jayanthi

அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஈரோடு வ .உ .சி பூங்கா ஆஞ்சநேயர் கோவில் உள்பட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி இன்று ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற வ.உ.சி. பூங்கா ஸ்ரீமகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை மகா கணபதிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 4 மணி முதல் 5 மணி வரை மூலவருக்கு மகா திருமஞ்சனம் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

hanuman

கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் அரசு அருங்காட்சியகம் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. முக கவசம் அணிந்து வந்த பொதுமக்களை உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மக்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு லட்டு, செந்தூரம், சிகப்பு கயிறு வழங்கப்பட்டது. 

hanuman

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், 14 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பொதுமக்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து, மதியம் 1.30 மணி முதல் 5 மணி வரை மூலவருக்கு வடைமாலை சாத்துதல் நிகழ்ச்சி நடைற்றது. தொடர்ந்து, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.

temple

இதேபோல், ஈரோடு கள்ளுக்கடைமேடு அஞ்சநேயர் கோவிலும் இன்று காலை அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். மேலும், காரைவாய்க்கால் ஆஞ்சநேயர் கோவிலும் இன்று அனுமன் ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.