ஆண்டிப்பட்டி அருகே அரசு மருத்துவமனை செவிலியர் வெட்டிக்கொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்!

 
andipatti

ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்து அரசு மருத்துவமனை செவிலியர் மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு செல்வி (43) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். செல்வி, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ், மனவியை பிரிந்து குழந்தைகளுடன்  திண்டுக்கல்லில் வசித்து வந்தார். இதனால், செல்வி பாப்பம்மாள்புரத்தில் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். 

theni

இந்த நிலையில், நேற்று இரவு சுரேஷ், செல்வியிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்து உள்ளது. இதனால், அருகில் வசிக்கும் உறவினர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். உறவினர்கள் சென்றபோது வீடு உட்புறமாக பூட்டி கிடந்துள்ளது. இதனால் அவர்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, செல்வி வீட்டில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். 

இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுரேஷ் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்த ஆண்டிபட்டி போலீசார், கொலையான செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.