ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை!

 
robbery

அரக்கோணம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுகானந்தன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் வருகிறார். இந்த நிலையில், சுகானந்தன், அரக்கோணத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதற்கு வசதியாக கடந்த ஒரு வார காலமாக குருவராஜபேட்டையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, அரக்கோணத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.

arakkonam

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நேற்றிரவு சுகாந்தன் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து சென்று, பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்ட உறவினர்கள், இதுகுறித்து உடனடியாக சுகானந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சுகானந்தன் நேரில் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் அரக்கோணம் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து சுகானந்தன் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.