பாலாறு, செய்யாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு... காஞ்சிபுரம் மாவட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

 
flood

காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாலாறு மற்றும் செய்யாறு வடிநில பகுதியில் மேல்புறம் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் இவ்வாறுகளில் திருப்பிவிடப்பட்டது. இன்று(19.11.21) காலை 8 மணி நிலவரப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 91,256 கனஅடி வெள்ள உபரிநீர் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றும் நீரின் அளவானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அதேபோல், உத்திரமேரூர் வட்டம் வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தடுப்பணையில் சுமார் 29,910 கனஅடி வெள்ள உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.

floods

இதனால், இவ்விரு ஆறுகளிலும் அதிக நீர் செல்லும் என்பதாலும், மேலும், இந்த இரண்டு ஆறுகளில் செல்லும் வெள்ளநீரானது மழையினால் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் இவ்வாற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்க உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டாட்சியர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினருடன் இணைந்து முன்னெச்சரிக்கை விடுமாறு தெரிவிக்கப்படுகிறது.மேலும், பாதிப்புகள் குறித்த அறிக்கையினை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் உடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றிற்கு செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும், மேலும், வீட்டில் உள்ள சிறுவர்/ சிறுமிகளையும் ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க  பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.