தருமபுரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு... மொத்த வாக்காளர்கள் 12,75,391 பேர்!

 
dharmapuri

தருமபுரி மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நேற்று வெளியிட்டார்.  இதன்படி தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 75 ஆயிரத்து 391 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 01.11.2021  அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு 01.01.2022 அன்றை தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தோர்  மற்றும் விடுபட்டவர்களிடம் இருந்து  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் பெறப்பட்டு அதன் மீது தணிக்கை மற்றும் விசாரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களில் இறந்தோர், குடிபெயர்ந்தோர், இருமுறை பதிவு ஆகிய தகுதியற்ற இனங்களில் உள்ளவர்களை பெயர் நீக்கம் செய்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பதிவுகளில் திருத்தம் செய்யக்கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை விசாரணை செய்து திருத்தம் செய்யப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியலை,  அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டார்.

voters

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, மற்றும் அரூர்(தனி) ஆகிய 5 தொகுதிகளில்  மொத்தம் 12 லட்சத்து 75 ஆயிரத்து 391 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 6 லட்சத்து, 43 ஆயிரத்து 253 பேர். பெண்கள் 6 லட்சத்து 31 ஆயிரத்து 962 பேர். மற்றவர்கள் 176 பேர். மாவட்டத்தில் அதிகபட்சமாக தருமபுரி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர். 2 லட்சத்து 65 ஆயித்து 942 வாக்காளர்களுடன் பாப்பிரெட்டிப்பட்டி 2ஆம் இடத்தில் உள்ளது. 2 லட்சத்து 39 ஆயிரத்து 470 வாக்காளர்களுடன் பாலக்கோடு தொகுதி கடைசி இடம் பிடித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 2022,  மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில்  பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பரை சரிபார்த்துக் கொள்ளளலாம்.