நிலத்தை அளவீடு செய்ய ரூ.24,000 லஞ்சம் பெற்ற பெண் நில அளவையர், கிராம உதவியாளர் கைது!

 
arrest

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய ரூ.24 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் நில அளவையர் மற்றும் பெண் கிராம உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள நைனார்பாளையம் வடக்கு கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். விவசாயி. இவர் தனது நிலத்தை அளவீடு செய்ய  கீழ்குப்பம் கிராம உதவியாளர் சுசிலாவை அணுகி உள்ளார். அதனை தொடர்ந்து, சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரியும் சூர்யாவிடம் விண்ணப்பித்து உள்ளார்.

kallakurichi ttn

அப்போது, நிலத்தை அளவீடு செய்வதற்கு ரூ.24 அயிரம் லஞ்சம் தர வேண்டுமென சூர்யா கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.24 ஆயிரம் பணத்தை  நேற்று நில அளவையர் சூர்யா மற்றும்  கிராம உதவியாளர் சுசிலா ஆகியோரிடம் ஜெயராமன் வழங்கினார்.

அப்போது அலுவலகத்தில் மறைந்திருந்த கூடுதல் எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.