குடும்ப தகராறில் மகனை அடித்து கொன்ற தந்தை!

 
murder

கன்னியாகுமரி அருகே மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் மகனை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி ஆட்டுப்பட்டி காலனியை சேர்ந்தவர் தங்கவேலு. இவர் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வள்ளியம்மாள் உடல்நல குறைவு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால், தங்கவேலு, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் மகன் கோலப்பனுடன்(35) வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான கோலப்பன் அடிக்கடி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

kumari

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டிற்கு மீன்வாங்கி வந்த கோலப்பன் அதனை சுத்தம் செய்து குழம்பு சமைக்கும்படி தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தங்கவேலு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தங்கவேலு தள்ளிவிட்டதில் கீழே விழுந்த கோலப்பன் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குமரி அரசு மருத்ததுவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோலப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்த வடசேரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி தங்கவேலுவை கைது செய்தனர். மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் மகனை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.