திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்!

 
tiruppur protest

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் வினீத் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  வழக்கமாக ஆட்சியர் அலுவலக 2-வது மாடியில்  உள்ள கூட்டரங்கில் கூட்டம் நடைபெறும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்தனர்.இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

இதனிடையே, புதிய கூட்ட அரங்கில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கான ஒலி பெருக்கி வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும், கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வினீத் வருவதற்கும் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து  மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வருவதாகவும், புதிய கூட்டரங்கில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

32

அப்போது, விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் அல்லாமல், மனுவாக அளிக்கும் வகையில் குறைதீர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய விவசாயிகள்,  ஏற்கனவே இருந்த நடைமுறையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை  நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் கட்டாயம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

அத்துடன், மாவட்ட ஆட்சியர் வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.