வழக்கை வாபஸ் பெற மிரட்டல்… ஊர்க்காவல் படை வீரர் மீது மனைவி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

 

வழக்கை வாபஸ் பெற மிரட்டல்… ஊர்க்காவல் படை வீரர் மீது மனைவி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

ஈரோடு

காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னுடன் சேர்ந்து வாழாமல் கொலை மிரட்டல் விடுக்கும் ஊர்க்காவல் படை வீரர் மீது நடவடிக்கை கோரி மனைவி, ஈரோடு மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பூங்கொடி(24) என்ற பெண் வந்து எஸ்.பி.யை சந்தித்து பரபரப்பான புகார் மனு கொடுத்தார்.அதில் அவர் கூறிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தேன். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் என்னை காதலித்து பின் தொடர்ந்து வந்தார். அவர் வற்புறுத்தியதன் பேரில் நானும் காதலித்தேன். அஜித்குமார் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் நான் கர்ப்பமடைந்தேன். இந்த நிலையில், அஜீத்குமாருக்கு, ஊர்க்காவல் படையில் வேலை கிடைத்ததால், என்னை திருமணம் செய்யாமல் காலம் கடத்தினார்.

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அக்.10-ந்தேதி அஜீத்குமாரை சந்தித்து, என்னை திருமணம் செய்ய வலியுறுத்தினேன். அப்போது, அவர் என் வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்தது. இதையடுத்து, நான் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸ் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த வருடம் மார்ச் 18ஆம் தேதி அஜித்குமார் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, என்னை பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்ற அவர், என்னுடன் சேர்ந்து வாழவில்லை. பலமுறை அவரை சந்தித்து பேசினாலும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

வழக்கை வாபஸ் பெற மிரட்டல்… ஊர்க்காவல் படை வீரர் மீது மனைவி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

இதனால் கடந்த வருடம் மே 29-ஆம் தேதி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு, அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். பின்னர், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் அஜித்குமார் முன்ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அஜித்குமார் திடீரென வந்து என்னிடம் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் எனச் சொல்லிகொலை மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து, என்னை பின் தொடர்ந்து வந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே உடனடியாக, இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். இனிடையே, புகாருக்கு உள்ளான அஜித் குமார், தற்போது ஊர்காவல் படையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.