இலவச மின்சாரம் வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

 
arrest

தருமபுரி மாவட்டம் கடத்தூரில் இலவச மின்சாரம் வழங்க விவசாயியிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். 

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள வெதரம்பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இலவச மின்சாரம் பெற விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இலவச மின் இணைப்பு வழங்கிட வேண்டி கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் தருமபுரியை சேர்ந்த வேடியப்பன் என்பவரை அணுகியுள்ளார். அப்போது, அவர் மின் இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறி உள்ளார்.

dharmapuri ttn

ஆனால் தன்னால் அவ்வளவு தொகை தர முடியாது என்றும், ரூ.15 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, நேற்று முதல் தவணையாக ரசாயனம் கலந்த 12 ஆயிரம் பணத்தை, முருகன் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து வேடியப்பனிடம் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேடியப்பனை, கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வணிக ஆய்வாளர் வேடியப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.