மதுபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக்கொலை... சாத்தான்குளம் அருகே பரபரப்பு!

 
murder

துத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்துள்ள தட்டார்மடம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்(73). தொழிலாளி. இவரது மனைவி உயிரிழந்த நிலையில், மகன் பென்சிங்குடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமநாதன், தவசியாபுரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடன் பஜாரில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

tuticorin

அப்போது, தவசியாபுரத்தை சேர்ந்த மாணிக்கம்(49), அவரது உறவினர் ஹரிகிருஷ்ணன்(30) ஆகியோர், கோவிந்தசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், இருவரும் கோவிந்தசாமியை தாக்கி உள்ளனர். இதனை அருகில் இருந்த ராமநாதன்  தட்டிக்கேட்ட நிலையில், மதுபோதையில் இருந்த மாணிக்கம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அவரை சரமாரியாக தாக்கினர்.

இதில்  பலத்த காயமடைந்த ராமநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பென்சிங் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் மாணிக்கம் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.