இரவுநேர ஊரடங்கு எதிரொலி : கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது!

 
cattle market

இரவுநேர ஊரடங்கு காரணமாக நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கமாகும். இந்த மாட்டுச் சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல், உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்தே சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி விடும். 

cattle market

மேலும், மாடுகளை வாங்குவதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டது. 

பொதுவாக பொங்கல் பண்டிகையை ஒட்டி 900 மாடுகள் வருவது வழக்கம். ஆனால் நேற்று கூடிய சந்தையில் இரவுநேர ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் யாரும் வரவில்லை. அதேபோல், உள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு வியாபாரிகள் வரவில்லை. இதனால், நேற்று 300 பசு மாடுகள், 200 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 550 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.