பொங்கல் சீர்வரிசை கொடுப்பதில் தகராறு... மருமகனை சரமாரியாக வெட்டிக்கொன்ற மாமனார்!

 
murder

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பொங்கல் சீர்வரிசை கொடுப்பது தொடர்பான தகராறில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமானர் போலீசில் சரணடைந்தார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்த டி.என். புதுக்குடியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சரத்குமார் (27). மெக்கானிக். இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மேலகடையநல்லூரை சேர்ந்த கண்ணன் என்பரது மகள் கற்பூரஜோதியை (23)  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கற்பூரஜோதியின் தாய், அவரது வீட்டுக்கு சென்று பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். சீர்வரிசை பொருட்களை பார்த்த சரத்குமார், இவற்றை ஏன் இங்கு கொண்டு வந்தார்கள்? என்று கூறி மனைவி கற்பூரஜோதியிடம் தகராறு செய்தார். 

tenkasi ttn

இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதால் கற்பூரஜோதி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால், கற்பூரஜோதியை அவரது தாயார் அழைத்துச்சென்று விட்டதாக கருதிய சரத்குமார், மாமனார் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது அவருக்கும், மாமனார் கண்ணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் சரத்குமாரை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கண்ணன் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.