“கற்போம், எழுதுவோம்” திட்ட பயிற்சி முகாம் தொடக்கம்

 

“கற்போம், எழுதுவோம்” திட்ட பயிற்சி முகாம் தொடக்கம்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கற்போம், எழுதுவோம் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி கற்காத நபர்களுக்கு, கல்வி அளிக்கும் விதமாக கற்போம், எழுதுவோம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பகுதியிலும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கி, அவர்கள் மூலம் கல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட உள்ளது.

“கற்போம், எழுதுவோம்” திட்ட பயிற்சி முகாம் தொடக்கம்

இதனையொட்டி நத்தம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு இன்று துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் 73 பேர் கலந்துகொண்ட நிலையில், அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி உள்ளிட்டோர் பயிற்சி வழங்கினர். இதில், உரையாடல்கள், நாடகம், கிராமிய கதைகள், பாடல்கள் வாயிலாக கல்வியை கற்பிப்பது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது