முழு ஊரடங்கால் திருச்சி மாநகரில் வெறிச்சோடிய சாலைகள்... தடையை மீறி சுற்றிய 200 பேர் மீது வழக்குப்பதிவு!

 
trichy

ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. மேலும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  

trichy

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து,  தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிறு அன்று தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், திருச்சி மாநகரின் முக்கிய இடங்களான சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் என்.எஸ்.பி. சாலை, பெரியக்கடை வீதி, பாலக்கரை, தில்லை நகர், உறையூர், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

trichy

ஊரடங்கை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தடுக்கும் விதமாக திருச்சி மாநகரில் 8 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 23 இடங்களில் வாகனம் மூலம் சோதனையும், 14 ரோந்து வாகனங்கள் மூலமாகவும் என 1000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கையொட்டி திருச்சி மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் கார்த்திகேயன், முதல் வார ஊரடங்கிற்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், ஆனாலும் மக்கள் ஆபத்தை உணராமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

trichy

திருச்சி மாநகரில் தேவையின்றி வெளியே சுற்றிய 200 பேர் மீது இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், மாநகரில் சுழற்சி முறையில் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், இரவு நேர ஊரடங்கில் ஓத்துழைப்பு அளிக்காமல் வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.