குடிமகன்களால் அச்சம்... பேருந்து நிறுத்தம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!

 
tassmac

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பொதுமக்கள் மற்றும் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக பேருந்து நிறுத்தத்தின் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்குட்பட்ட எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் சில்லாங்காட்டு வலசு, அய்யம்பாளையம், வெப்பிலி ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், சில்லாங்காட்டு வலசு பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வரும் குடிமகன்கள் மதுவை வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து மதுகுடித்து வருகின்றனர். மேலும், அதன் அருகிலேயே கொட்டகை அமைத்து நாள் முழுவதும் மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் அந்த பேருந்து நிறுத்ததை பொதுமக்கள் பயன்படுத்த அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

tasmac

ஊத்துக்குழி - கொடுமணல் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பேருந்து நிறுத்தம் வழியாக அய்யம்பாளையம் உயர் நிலைப்பள்ளி மற்றும் வெப்பிலி தொடக்கப்பள்ளிக்கு நாள்தோறும் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கடந்து செல்கின்றனர். அதேபோல், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த பேருந்த நிறுத்ததில் தான் தங்களது நிறுவனங்களின் பேருந்தில் ஏறிச்செல்லும் நிலையில், குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் உருண்டு புரள்வதும், அவ்வப்போது போதையில் வாகனங்களை நிறுத்தி தகராறு செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

3

இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த கடையை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அச்சுறுத்தும் விதமாக பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு எக்கட்டாம்பாளையம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கடையை அகற்றாவிட்டால் பெண்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.