நிலப்பிரச்சினையால் தீக்குளிக்க முயன்ற தம்பதி... விரைந்து சென்று காப்பாற்றிய ஆட்சியர்!

 
collector office erode

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நிலப் பிரச்சினை தொடர்பாக கணவன் -மனைவி  தீக்குளிக்க முயன்ற நிலையில் அவர்களை ஆட்சியர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர்  ராமசாமி (46). இவரது மனைவி சசிகலா(40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், ராமசாமி மற்றும் அவரது  சகோதரர்கள் சேர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு தாண்டாம்பாளையத்தில்  8 சென்ட் நிலம் வாங்கி உள்ளனர். இந்த நிலம் அருகே அதே ஊரை சேர்ந்த  ஒருவரும் விவசாயத் தோட்டம் அமைத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ராமசாமி தான் வாங்கிய நிலத்தில் வீடுகட்ட தொடங்கினார். 2017 ஆம் ஆண்டு வீடுகட்டும் பணிகள் முடிக்கப்பட்டு பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடந்தது. 

அப்போது, பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் இது என்னுடைய நிலம். உங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டை இடித்து விடுவேன் என்று கூறி தொந்தரவு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி, சசிகலா தம்பதியினர் இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காததால் விரக்தியில் இருந்த ராமசாமி - சசிகலா தம்பதியினர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் பாட்டிலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு வந்திருந்தனர். 

erode

அப்போது, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஆர்.டி.ஓ பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராமசாமி, சிவகாமி தம்பதியினர் தாங்கள் வைத்திருந்த பாட்டிலை எடுத்து தங்கள் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரும் அவருடன் வந்திருந்த பாதுகாவலர்களும் இருவரிடம் இருந்து பாட்டிலை பறித்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. உடனடியாக அவர்களிடம் நடந்த விவரத்தை கலெக்டர் கேட்டறிந்தார். 

எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை என்னிடம் கூற வேண்டும். இதுபோல் தீக்குளிக்க முயற்சி செய்வது தவறாகும் என்று அவர்களிடம் அறிவுரை கூறினார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீட்டைக் கட்டி உள்ளோம். அந்த வீட்டையும் நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து தீக்குளிக்க வந்தோம். சம்பந்தப்பட்ட மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து  போலீசார் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.