முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட தம்பதி உயிரிழப்பு... கடலூர் அருகே பரபரப்பு!

 
dead

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட தம்பதி உயிரிழந்த நிலையில், பேரன் உள்ளிட்ட 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள இளங்கியனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவரது மனைவி கொளஞ்சியம்மாள் (55). இவர் கடந்த 30ஆம் தேதி வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். தொடர்ந்து, தம்பதியினர் இருவரும் தங்களது பேரன் சரவண கிருஷ்ணனுடன்(6) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த நிதிஷ்(8), பிரியதர்ஷினி(4) ஆகியோருடன் முள்ளங்கி சாம்பாரை சாப்பிட்டுள்ளனர். சிலமணி நேரத்தில் கொளஞ்சியம்மாளுக்கு செரிமான பிரச்சினை ஏற்பட்டதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

cuddalore

இதேபோல், கடந்த 1ஆம் தேதி சுப்பிரமணியனுக்கு, உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களை தொடர்ந்து, முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட குழந்தைகள் மூவருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து, சரவண கிருஷ்ணன் திருச்சியில் தனியார் மருத்துவமனையிலும், நிதிஷ், பிரியதர்ஷினி ஆகியோர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சுப்பிரமணியின் மகன் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து,  அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.