கோவை கொடிசியாவில் 700 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்... கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

 
kodisiya

கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அளிக்க கொடிசியா வளாகத்தில் 700 படுக்கை வசதி கொண்ட பிரத்யேக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்) தாரேஸ் அகமது நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுமேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது, அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

kodisiya

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரேஸ் அகமது, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக 774 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு கலைக்கல்லூரியில் 120 படுக்கைகள்  அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் 732 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தாரேஸ் அகமது தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் மறும் தனி அலுவலர் ராஜகோபால சுன்கரா, வணிகவரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோகன், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனிடையே, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையம், படுக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால சுன்கரா பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.