பவானி அருகே ஐடியல் பள்ளியில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம்... 220 படுக்கைகளுடன் தயாராகிறது!

 
bhavani

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஐடியல் பள்ளியில் 220 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுநேர கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் தாக்கம் அதிகரித்து கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால், தனியார் பள்ளிகள் கல்லூரி வளாகங்கள், திருமண மண்டபங்கள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

corona virus

இதன்படி, பவானி அடுத்த பருவாச்சி ஐடியல் தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது ஆயிரக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து, இயல்பு நிலை திரும்பியதால் சிகிச்சை மையம் மூடப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஐடியல் பள்ளி வளாகத்தில் மீண்டும் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐடியல் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, 220 படுக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற உள்ளது. ஜம்பை வட்டார மருத்துவ குழுவினர் மேற்பார்வையில் பள்ளியில் மீண்டும் சிகிச்சை முகாம் தொடங்கப்பட உள்ளது. நோயாளிகள் சிகிச்சைக்கு வருவது அதிகரிக்கும்போது, இங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.