கொரோனா பரவல் எதிரொலி... வாளையார் சோதனைச்சாவடியில் கோவை ஆட்சியர் ஆய்வு!

 
walayar checkpost

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனைச்சாடியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, இருமாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  கோவை மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனைச்சாவடியில், நேற்று மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கேரளாவில் இருந்து வரும் வாகன ஓட்டிகளிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் உள்ளதா? என சரிபார்த்து அவர்களை தொடர்ந்து செல்ல அனுமதித்தார்.

cbe collector

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் தற்போது 309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாவும்,  அரசு மருத்துவமனை மட்டுமின்றி கொடிசியாவில் தற்போது 350 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். நோயின் தாக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் படுக்கை வசதிகளை அதிகரிக்கப்படும் என கூறிய அவர், அரசாங்க மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து வரக்கூடிய பயணிகள் இரு தவணை தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றிதழும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 24 மணிநேரத்திற்கு முன்பாக எடுத்த கொரானா நெகட்டிவ் சான்றிதழும் காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். அத்துடன், கேரளாவிலிருந்து வருவோர் சான்றிதழ் இன்றி வந்தால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், கேரளாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் வனப் பகுதியிலிருந்து வனம் வழியாக வருவோரை தடுக்கவும், வன ஊழியர்களின் உதவியுடன் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.