"கொரோனா 3-ஆம் அலை- திண்டுக்கல் மாவட்டத்தில் 2,761 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன" - ஆட்சியர் விசாகன்!

 
dindigul

 கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில்  2,761 படுக்கைகள், 982 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 365 ஆக்ஸிஜன்  செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக, ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  உலகின் பல்வேறு நாடுகளில்  ஒமிக்ரான் தொற்று காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது தினசரி சராசரியாக 5 முதல் 8 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் நோய்தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும்,  கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அவசியமின்றி அடிக்கடி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பொதுஇடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் தீவிர நோய் மற்றும் இறப்பு குறைவாக உள்ளதால், அனைவரும் 2  தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க வேண்டும்.

dgl gh

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4ஆம் தேதி வரை 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16,72,129 (91.3 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், 11,52,638 (63.1சதவீதம்) இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,761 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதில், 215 தீவிர சிகிச்சை படுக்கைகள் அடங்கும். மேலும், தீவிர நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 982 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 365  ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன, என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.